திருநெல்வேலி சதிவழக்கின் மறக்கப்பட்ட வீரநாயகர் சாவடி அருணாசலம் பிள்ளை துயரக் கதை
(27-04-1937 நினைவு நாள்)
2002 ம் ஆண்டு நான் செங்கோட்டை சென்றிருந்த வேளையில் எனது அருமை நண்பர் கடையநல்லூர் ஓவிய ஆசிரியர் திரு. ஜெயராமன அவர்கள் தங்களை ஒரு முக்கியமான இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அந்த இடத்தில் தங்களது பாதம் கட்டாயம் படவேண்டும் என்றார்.
முதலில் நான் வீரவாஞ்சி வசித்த இல்லத்துக்கு அழைத்துப் போவார் என்று எண்ணிய வேளையில் வீரவாஞ்சியுடன் ஆஷ் கொலை திட்டத்துக்கு உடன் சென்று தப்பித்து தலைமறைவானவரும், கல்கத்தா நேஷனல் கல்லூரியில் மருத்துவ படிப்பை படித்த அன்றைய காலத்து இளைஞர் சாவடி அருணாசலம் பிள்ளையின் இரண்டு கட்டுமாடி வீட்டின் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்.
ஜெயராமன் அவர்களை ஆச்சரியத்துடன் நோக்கினேன். வரலாற்று துயரநாயகரின் வாழ்ந்த இல்லத்தினை தரிசிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த மாதிரி நாயகர்கள் எல்லாம் உங்கள் மூலமாகவே நிறைவேறுகிறது என்று மகிழ்ந்த நிலையில் சாவடி அருணாசலம் பிள்ளை வம்சாவளியினர் இன்முகத்துடன் எங்களை வரவேற்றனர்.
குளுமையாக இருந்த வீட்டின் முன்பு வாசலைக் கடந்து விஸ்தாரமான திண்ணையைத் தாண்டியதும் நடுவீட்டில் அமரவைத்த அந்த அறையில் ஆஷ் கொலைவழக்கில் சொல்லொண்ணா கொடுமையை அனுபவித்த சாவடி அருணாசலம்பிள்ளையின் படம் அலங்கரித்துக் கொண்டிருந்தது.
அந்த துயரநாயகரின் படத்துக்கு அருகே மற்றொரு படம் இந்தியாவின் புகழ்பெற்ற தமிழகக் கணிதமேதை (இராமனுஜத்திற்கு பிறகு) எஸ்.எஸ். பிள்ளை அவர்களது படச் சட்டகமும் அந்த பிரதான அறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது. இவர் எப்படி என்று வம்சாவளியினரிடத்தில் கேட்ட வேளையில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தகவல் கிடைத்தது.
அந்த வீடு முக்கிய பிரமுகர் ஜமீன்காலத்து வீடு மாதிரி தோற்றமளித்தது. அந்த பரம்பரையினரும் குணத்தில் பண்பட்ட மேன்மை மிகு குடும்பமாக பரிமளித்தனர்.
சாவடி அருணாசலம்பிள்ளை செங்கோட்டையில் மிகக் குறிப்பிடத்தக்க நிலபுலமிக்க செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். சொல்லப்போனால் செங்கோட்டை ஊரின் பாதி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலபுலம் கொண்ட வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பெரியவர் வ.உ.சி. மற்றும் சிவா சிறையில் அடைக்கப்பட்டு வ.உ.சி.க்கு சிறையில் அளிக்கப்படும் கொடுமையைத் தாங்காது பல இளைஞர்கள் கொதிநிலையின் உச்சிக்குச் சென்று கலெக்டர் ஆஷ் அவர்களை போட்டுத் தள்ள எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி தலைமையில் பாரத மாதா அசோசியேசன் குடையின் கீழ் இயங்கி வந்தனர். அந்தச் சங்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டவர்.
இந்த சாவடி அருணாசலம்பிள்ளை வீட்டின் முதல் மாடியில் பாரத மாதா இளைஞர்கள் சங்கம் சார்பாக கலெக்டர் ஆஷ் அவர்களை கொலை செய்ய எண்ணி 14.04.1911 அன்று சித்திரை கூட்டம் நடந்தது.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரகசிய அறையை நான் பார்க்க விரும்பி அந்த குடும்ப வம்சாவளியினரிடத்தில் அனுமதி பெற்று மேல்மாடி சென்று என் காலடியை பதித்து என்னை அறியாமல் உணர்ச்சி மேலிட்டு தரை முழுதும் என் உடம்பு படிய விழுந்து அந்த இடத்தை வணங்கினேன்.
இந்த அறையில்தான் 14.04.1911 அன்று நடந்த ரகசிய கூட்டத்தில் சுதேசிய கப்பலை முடக்கியும், பெரியவர் வ.உ.சி.யின் துயரப்பாடுகளுக்கும் காரணமாக இருந்த கலெக்டர் ஆஷ் அவர்களை கொலை செய்ய பதினைந்து உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் மாலை 3.00 மணியிலிருந்து 7.00 மணி வரை நடந்தது. கூட்டத்தின் இறுதியாக ரத்தக் கையெழுத்திட்டு ஆஷினை கொலை செய்ய தீர்மானம் செய்தனர்.
மிகப்பெரிய செல்வந்தர் சாவடி சுப்பிரமணிய பிள்ளைக்கு பல காலம் கழித்து அருந்தவச் செல்வராக பிறந்த சாவடி அருணாசலபிள்ளை பள்ளிப் படிப்பு முடித்த கையோடு கல்கத்தா நேஷனல் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்து அங்கு கல்வி பயில சென்றவர். இதற்கிடையே பெரும் செல்வந்தர் மகளாகிய தங்கம்மாள் என்பவரை 29.08.1901ல் திருமணமும் செய்து கொண்டதோடு அருணாசலம் அவர்களது மனைவி முதல் கருவைச் சுமந்து கொண்டிருந்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆஷ் கொலைக்கு திட்டமிட்ப்பட்டு, யார் கொலை செய்வதென திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்க, வாஞ்சிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. ஆஷ் அவர்களது பயணத்திட்டங்களை ரகசியமாக கவனித்தனர். வாஞ்சிக்குத் துணையாக சாவடி அருணாசலம் பிள்ளை உடன் வருவதற்கு உறுதியளிக்க, அதனைத் தொடர்ந்து 13-06-1911 திட்டத்தை நிறைவேற்ற திருநெல்வேலி வந்து சேர்ந்தனர்.
17.06.1911 அன்று ஆஷ் தனது மனைவியுடன் கொடைக்கானல் செல்லவிருப்பதை அறிந்தனர். திட்டப்படி வாஞ்சி திட்டத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும். ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அந்தச் சமயத்தில் சாவடி அருணாசலம் பிள்ளை அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
வாஞ்சியும், சாவடி அருணாசலம் பிள்ளை அவர்களும் ஆஷ் பயணித்த அதே ரயிலில் பயணித்தனர். மணியாச்சி ரயில் நிலையத்தில் திட்டமிட்டப்படி வாஞ்சி கச்சிதமாக ஆஷினை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, சிறிது தூரம் ரயில்வே பிளாட்பாரத்தில் ஓடி கழிவறைக்குள் புகுந்து தன்னையும் மாய்த்துக் கொண்டார்.
ஆஷ் கதை முடிந்துவிட்டது என்பதை அறிந்த சாவடி அருணாசலம பிள்ளை யார் கண்ணிலும் படாமல் ரயில்வே பாதையைத் தாண்டி ஓடி மாயமாய் மறைந்து விடுகிறார். வாஞ்சியின் சட்டைப் பையில் இருந்த சில தகவல்கள் கொண்டே செங்கோட்டை முழுவதும் முழு காண்காணிப்புக்கு ஆளானது. அதில் சாவடி அருணாசலம்பிள்ளை கல்கத்தா நேஷனல் மருத்துவ கல்லூரி சம்பந்தப்பட்ட ஆவணக் குறிப்பேட்டைக் கண்டறிந்து டி.ஐ.ஜி. தாமஸ் தலைமையில் ஒரு சிறப்புப்படை கல்கத்தா நோக்கி பயணமாகியது.
தர்ப்பை புல்லைஏந்தும் ஏழைப்பிராமணன் வாஞ்சி ஆஷின் கதையை முடித்ததை அறிந்த பிரிட்டீஷ் போலீஸ் பட்டாளம் கலகலத்து விட்டது. லண்டன் பாராளுமன்றம் வெலவெலத்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொடிய அடக்குமுறை. கொலை நடந்த ஒரு வாரத்துக்குள் சாவடி அருணாசலம் பிள்ளை கல்கத்தாவில் கைது செய்யப்படுகிறார்.
கைது செய்யப்பட்ட சாவடி அருணாசலம் பிளையை கொடூரமான மிருகங்களை சங்கிலி போட்டுக் கட்டி இழுத்து வருவது போல கையிலும், காலிலும் சங்கிலியால் கட்டி ரயில் இருக்கையில் கால்களோடு இணைத்து சென்னை நோக்கி கொண்டு வரப்பெற்றார். முன்னரே கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களோடு சேர்த்து இவரையும் சென்னை சிறையில் அடைத்து வைத்தனர்.
மொத்தம் 14 குற்ற்வாளிகள் பட்டியலில் சாவடி அருணாசலம் பிள்ளை 11 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். 1911 ம் ஆண்டு செப்டெம்பர் 11ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு ஆரம்பமாகியது. இந்த விசாரணை 1912 பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
சென்னை சிறையில் குற்றவாளிகள் 14 பேரையும் நிறுத்தி அடையாளம் காட்டச் சொல்ல அப்போது 11வது குற்றவாளீயாக சாவடி அருணாசலத்தை திருநெல்வேலி பேராசிரியர் ஞானமுத்து அடையாளம் காட்டுகிறார். (ஆஷ் கொலை வழக்கு தீர்ப்பு நகல்- பகுதி-4, பக்க, 1393,1394)
அதே போன்று ஏ.எம்.சி. தாம்போ தலைமை விசாரணையில் போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட சாடசியத்தின் வழியே
‘’திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு சம்பந்தமாக செங்கோட்டைக்குச் சென்ற போது அவர் வீட்டில் காணப்படவில்லை. அவருடைய வீட்டில் அகப்பட்ட ஆவணங்களின்படி கல்கத்தா மெடிக்கல் காலேஜில் சேர வந்துள்ள பிராஸ்பெக்டஸை ஆதாரமாகக் கொண்டு சென்னை போலீசார் கல்கத்தாவுக்குச் சென்று அங்குள்ள போலீசாருடன் ரகசிய தொடர்பு கொண்டு ஆய்வாளர் ராபர்ட்ஸ் என்பவருடன் கூலத்தோவில் மெடிக்கல் காலேஜ் மாணவர் விடுதியின் அறையை சோதனையிட்டதில் ஒரு பெரிய பீரோவிற்கு பின்புறம் ஒளிந்திருந்த சாவடி அருணாசலம் பிள்ளையை கைது செய்து திருநெல்வேலியில் நடக்கும் சட்டப்பூர்வாங்க விசாரணைக்கு உட்படுத்தி, அவரை ஆஜர்படுத்தினோம் எனக் கூறப்பட்டது’”.
அதன் பின்னர் இறுதி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஒன்றரை ஆண்டுகள் நடைபெற்றது. இந்தக் காலக் கட்டத்தில் சாவடி அருணாசலம் பிள்ளை அனுபவித்த துன்பம் இருக்கிறதே அதை அனுபவித்தால்தான் அதன் கொடூரத்தை உணர முடியும்.
பச்சை மாமிசத்தை மலம் கொட்டும் சட்டியில் கொடுத்துச் சாப்பிடச் சொன்னது கூட அவரை வருத்தவில்லை.
ஆனால் வெள்ளையர்கள் ‘’இந்தக் கைதானே ரத்தக் கையெழுத்து போட்டது?” எனச் சொல்லி சொல்லி ரூல்தடியால் அவரது கைவிரல்களின் எலும்புகளை ஒடித்ததை நினைத்து தனது வாழ்நாள் முழுவதும் எண்ணி வருந்தினார்.
நல்ல எழுத்தாளரான இவர் இந்த கைகளால் எழுத முடியவில்லை என்றபோது முழு வேதனை அடைந்தார்.
இந்த வழக்குகளுக்காக தன்னிடமுள்ள சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்தார்.
ஒருவழியாக ஆந்திர கேசரி பிரகாசம், ராமானுஜாச்சாரி போன்ற சட்டநிபுணர்களின் வாதத்திறமையால் வழக்கில் இருந்து விடுதலை ஆனார்.
லட்சாதிபதியாக பிறந்து செல்வாக்காக வாழவேண்டிய அருணாசலம் பிள்ளை அவர்கள் சிறை தந்த நோயோடும், சொத்தை இழந்த கவலையோடும், தேற்ற வேண்டிய உறவினர்கள் இவரை சமூக புறக்கணிப்பு செய்தமையும், போலீசாரின் தொடர் கண்காணிப்பும் இவரை மன அளவில் முடக்கிப்போட்டது.
வாழ்க்கை முழுமையும் சூன்யமாக்கப்பட் சூழழில் சமூக சேவை செய்யலாம் என்றெண்ணி முழுக்க முழுக்க பட்டியல் சாதியினரைக் கொண்டு ஒரு உணவு விடுதி தொடங்கி இந்த விடுதிக்கு சாப்பிட வரும் உயர் சாதியினருக்கு இலவமாகச் சாப்பாடு போடுவதோடு வந்து சாப்பிடுபவர்களது துணிச்சலைப் பாராட்டி வெகுமதியும் கொடுத்துள்ளார்.
இந்தச் செய்கையினால் தீண்டாமையை ஒழித்து விடலாம் என்று எண்ணினார். ஆனால் பிற சாதிக்காரர்களின் வெறுப்புக்கு ஆளாகி அவர் நடத்திய உணவு விடுதியையும் தீக்கரையாக்கி விட்டார்கள். அதே போன்று பட்டியல் சாதி திருமணங்களை தானே முன்னின்று நடத்துவதிலும் தயங்க மாட்டார் சாவடி அருணாசலம் பிள்ளை.
நண்பர்களை பார்த்து பேச முடியவில்லை. இயல்பாக நினைத்த கருத்துக்களை எழுத கூட முடியாத அளவுக்கு கைவிரல் எலும்புகளும் முற்றிலும் ஒடிக்கப்பட்ட நிலையில் என்னதான் செய்ய முடியும்.
இறுதிக் காலத்தில் தனக்குரிய தமிழறிவை பயன்படுத்தி வறுமையைப் போக்க திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பிரபல மருத்துவராக ஜொலிக்க வேண்டியவர் தந்து மருத்துவப் படிப்பினையும் தொடர முடியாமல், தமிழாசிரியராக பணிபுரிந்து இதே நாளில் 27.04.1937ம் ஆண்டு தமது 45 ம் வயதில் மறைந்தார்.
வீரவாஞ்சிக்கு உறுதுணையாக இருந்த சாவடி அருணாசலம் பிள்ளை மனைவி தங்கம்மாள் 20.06.1967ல் தியாகி பென்சனுக்கு விண்ணப்பித்த நிலையில் அவருக்கு பென்சனுக்கு தகுதி இல்லை என்று அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் மீண்டும் பென்சனுக்கு முயற்சித்த வேளையில் எம்.ஜி.ஆர். பரிவுடன் மனுவை பரிசீலித்து 1980ம் ஆண்டில் பென்சன் வழங்க உத்தரவிட்ட நிலையில் சில மாதங்களில் பென்சன் பெற்று மனைவியும் இறந்து விட்டார்.
சித்திரைக் கூட்டம் நடந்த அந்த ரகசிய அறையில் என் காலடி பட்டதும் பெரியவர் வ.உ.சி.க்காக எத்தனை எத்தனை இளைஞர்கள் தனது செல்வாக்கு மிக்க வாழ்க்கையைத் தொலைக்க முன்வந்துள்ளனர்.
பெரியவர் வ.உ.சி. தனது வாழ்க்கையை மட்டும் முற்றிலும் அழித்துக்கொண்டாலும் அவருக்காக சிவா, மாடசாமி, ஆர்யா, கிருஷ்ணசாமி சர்மா போன்ற பல கணக்கில்லா இளைஞர்கள் பெரியவர் வ.உ.சி. எழுப்பிய தியாக வேள்வித் தீயில் அழித்துக் கொண்ட இளைஞர்கள் வரலாற்றை மீட்டெடுத்து ஆவணப்படுத்துவது இளைய சமுதாயத்தினருக்கு நாம் கடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் இவர்கள் பொது வரலாற்று ஆவணங்களில் தேடினால் அகப்பட மாட்டார்கள்.
வரகவி சுப்பிரமணிய பாரதி ஒரு தடவை பச்சையப்ப கல்லூரி பேராசிரியர் திருமணம் செல்வகேசராய முதலியார் அவர்களைச் சந்தித்த வேளையில் வ.உ.சி. பெயர் அடிபடுகிறது. அச்சமயம் பாரதியிடம் முதலியார் வருத்தம் தோய்ந்த குரலுடன் பின்வருமாறு கூறுகிறார்.
’’ பரிசுத்த்தமான சர்வபரித் தியாகி வ.உ.சி. என்ற தேசபக்தரை பரிதவிக்கவிட்ட இந்த நாடு உருப்படாது என்று சாபமிட்டாராம்.
வ.உ.சி. போன்ற ஆளுமைக்கே வரலாற்றில் இடம் இல்லாத இந்த நாட்டில் மாடசாமி, அருணாசலம் போன்றோரை எவ்வாறு நினைவில் கொள்வார்கள் என்று நாம் நினைப்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ரங்கையா முருகன் in FB